குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2047

இன்று 2016, சித்திரை(மேழம்) 30 ம் திகதி சனிக் கிழமை .

தொல்லியல் ஆய்வில் கலாநிதி பட்டம் பெற்ற முதலாவது இலங்கைத்தமிழர் பேராசிரியர் சிற்றம்பலம்!

09.10.2011-திருவள்ளுவராண்டு.2042-பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம் அவர்கள் இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாடு  என்ற தலைப்பில் தனது கலாநிதிப் பட்ட ஆய்வினை மேற்கொண்டிருந்தார். இந்த ஆய்வுக்கட்டுரை இலங்கைத்தமிழரின் வரலாறு மற்றும் பண்பாடு பற்றிய முக்கியமான அம்சங்களை ஆய்வு செய்கின்றது. தனது கலாநிதிப் பட்டத்திற்காக மேற்படி தலைப்பில் ஆய்வை மேற்கொண்ட முதலாவது இலங்கைத் தமிழர் இவராவார் என யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இலக்கிய கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களை அறிமுகப்படுத்தி உரையாற்றிய யாழ். பல்கலைக்கழக உயர்பட்ட படிப்புகள் பீட பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ச.சத்தியசீலன் தெரிவித்தார்.

வேந்தர் அவர்களே!
 

தகைசால் ஓய்வுநிலைப் பேராசிரியரும,; மூத்த சகபாடியும், நண்பருமான பேராசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம் அவர்களை கௌரவ இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கும் பொருட்டு தங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
 பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னோடிகளாக இருந்த முக்கியமான கல்வியாளர்களில் ஒருவராவார். அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள அராலியில் 01.10.1941 ஆம் ஆண்டு பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை அராலி சரஸ்வதி வித்தியாசாலையிலும் இரண்டாம் நிலைக்கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பெற்றார். அங்கிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி வரலாற்றில் சிறப்புக்கற்கை நெறியை மேற்கொண்டு 1965 இல் பட்டதாரியாக வெளியேறினார்.
 

கொழும்பில் உள்ள பல்கலைக்கழகங்கள் சிலவற்றிலும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் வரலாற்றுத்துறையில் உதவி விரிவுரையாளராகச் சிலகாலம் கடமையாற்றினார். இந்தியாவில் உள்ள பூனாம் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்று அவரின் விருப்புக்குரிய பாடமான தொல்லியலில் விசேட நிபுணத்துவம் பெற்றார். 1973 இல் தொல்லியலில் முதுகலைமாணிப் பட்டத்தில் முதற் பிரிவில் சித்தி பெற்றதோடு அதே பல்கலைக்கழகத்தில் தொல்லியலில் கலாநிதிப் பட்டத்தையும் 1980 இல் பெற்றுக் கொண்டார். இப்பட்;டங்களுக்கான ஆராய்ச்சிகளையும் பயிற்சிகளையும் உலகப் புகழ் பெற்ற இந்திய தொல்லியலாளர்களான பேராசிரியர் ஏ.டி.சங்காலியா, கலாநிதி  கே.ஏ.டவாலிகர் ஆகியோரின் வழிகாட்டலில் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம் அவர்கள் இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாடு  என்ற தலைப்பில் தனது கலாநிதிப் பட்ட ஆய்வினை மேற்கொண்டிருந்தார். இந்த ஆய்வுக்கட்டுரை இலங்கைத்தமிழரின் வரலாறு மற்றும் பண்பாடு பற்றிய முக்கியமான அம்சங்களை ஆய்வு செய்கின்றது. தனது கலாநிதிப் பட்டத்திற்காக மேற்படி தலைப்பில் ஆய்வை மேற்கொண்ட முதலாவது இலங்கைத் தமிழர் இவராவார்.
 

அப்போதைய யாழ்ப்பாண வளாகத்தில் வரலாற்றுத்துறையில் உதவி விரிவுரையாளராக 1975 ஜனவரியில் இவர் இணைந்து கொண்டார். 1980 இல் தனது கலாநிதி பட்டத்தைப் பெற்றதன் பின்பாக விரிவுரையாளரானார். 1994 இல் திறமை அடிப்படையில் இணைப் பேராசிரியராகவும், 1996 இல் வரலாற்றுப் பேராசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார். 2006 இல் சிரேஷ்ட பேராசிரியரானார். அவர் 2008 இல் பல்கலைக்கழக சேவையிலிருந்து ஓய்வு பெற்றதோடு அதே ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தகைசால் ஓய்வுநிலைப் பேராசிரியர் பட்டத்தை வழங்கி அவரைக் கௌரவப்படுத்தியது.

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேவையில் (1975 -2008) பல்வேறுபட்ட பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்தார். இரண்டு சகாப்பதங்களாக வரலாற்றுத்துறைத் தலைவராக பதவி வகித்தார். அக்காலப் பகுதியில் தனது துறைசார் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தார். அவர் பல நூல்களையும் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக விளங்கிய காலத்தில் ஆய்வு முறைமைகளை புனர் நிர்மாணம் செய்வதில் ஆர்வம் காட்டினார். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் பதவி வகித்தார் (2006-2009). பல்வேறு தடவைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தராகவும் கடமையாற்றியுள்ளார்.
 தான் வகித்த நிர்வாகப் பதவிகளுக்கும் அப்பால் ஒரு சிறந்த விரிவுரையாளராக, திறமை மிக்க பேச்சாளராக, ஒழுங்கு முறையான கடின உழைப்புள்ள கல்வியாளராக ஆராய்ச்சியாளராக காணப்பட்டார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பன்மைத்தன்மை மிக்கன. இவரது பிரதான ஆய்வுப் பரப்புக்களாக சிறப்பாக வரலாறும் தொல்லியலும் இடம்பெற்றாலும் இந்துப் பண்பாடு, நாகரிகம் என்பவற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இலங்கைத் தமிழர் வரலாறு, பண்பாடு, இலங்கையில் இந்து மதம் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டியவராகத் திகழ்ந்தார்.

பேராசிரியர் தமிழிலும்;, ஆங்கிலத்திலும் ஐம்பத்து ஐந்து இற்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை இலங்கையிலும் இந்தியாவிலும் வெளியான பல்வேறு ஆய்விதழ்களில் எழுதியுள்ளார். அவை யாவும் அறிஞர்களால் உயர் கருத்திலானவை என்ற பாராட்டைப் பெற்றுள்ளன. மேலும் அறிவுப் பரம்பலை ஏற்படுத்தும் வகையில் அவரால் எழுதப்பட்ட பெருந்தொகையான கட்டுரைகள் பல்வேறு வெளியீடுகளிலும் வந்துள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தினால் வெளியிடப்பட்ட ஆய்வு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக ஏழு வருடங்கள் சேவையாற்றியுள்ளர். ஆரம்ப காலங்களில் இச்சஞ்சிகை வெளியீடு பொறுத்து நிதிப்பிரச்சனைகள் காணப்பட்டன. அவ்வேளைகளில் நலன்விரும்பிகளிடம் இருந்து நிதி சேகரித்து சஞ்சிகைகளை வெளியிட்ட பெருமையும் அவரையே சாரும். பொதுவாக கல்விசார் விரிவுரையாளர்கள் சிறப்பாக இளம் விரிவுரையாளர்கள் ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதற்கான ஊக்குவிப்பை வழங்கியவர் இவர். இது தவிர தென்னாசியப் படிப்பு  South Asian Studies சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் விளங்கியவர்.
 

பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள் முக்கியம் வாய்ந்த பல நூல்களையும் எழுதியுள்ளார். அவற்றுள் பண்டைய தமிழகம், யாழ்ப்பாணத்து தொன்மை வரலாறு, இலங்கையில் இந்து சமய வரலாறு –கி.பி 500 வரை என்பன குறிப்பிடத்தக்கன. அவராலும் வரலாற்று துறை சார்ந்த விரிவுரையாளர்களாலும் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாறு என்ற பெயரில் அவரை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்தது.
 அவர் வரலாறு, இந்துநாகரிகத் துறை சார்ந்த முதுதத்துவமாணி மாணவர்களின்  ஆய்வுகளுக்கு மேற்பார்வையாளராக இருந்துள்ளார். மேலும் இந்தியப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் வரலாறு, தொல்லியல் முதுதத்துவமாணி ஆய்வுகளுக்கான வெளிவாரி மதிப்பீட்டாளராகவும் இருந்துள்ளார்.

பாலசிங்கம் ஆண்கள் விடுதியின் காப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். பல்கலைக்கழகத்தினால் நியமிக்கப்பட்ட அல்லது தெரிவு செய்யப்பட்ட பல்வேறு சங்கங்களினதும் தலைவராக அல்லது இணைப்பாளராக செயற்பட்டுள்ளார்.  பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (UTA) துடிப்புள்ள அங்கத்தவராகவும் செயற்பட்டுள்ளார். ஆசிரியர் சங்கத்தின் தாபக உபதலைவராகவும் பின்னர் தலைவராகவும் இருந்து அங்கத்தவர் நலன்களில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கியுள்ளார். அத்துடன் மாணவர்களின் நலன்களிலும், ஒழுக்கத்திலும் அதிக அக்கறை கொண்டவராகப் பேராசிரியர் காணப்பட்டார். யாழ்ப்பாணத்தில் 1987 இல் ஏற்பட்ட குழப்பங்களினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த வரலாற்றுத்துறையின் அருங்காட்சியகத்தை மீளப் புனர் அமைத்தவராகவும் விளங்கினார்.
 

பேராசிரியர் அவர்கள் யாழ்ப்பாண வளாக பரமேஸ்வரன் ஆலயத்தின் முகாமைத்துவ சபையின் உபதலைவராகவும் பின்னர் அதே ஆலயத்தில் தர்மகர்த்தா சபையின் தலைவராகவும் செயற்பட்டுவருகின்றார்.
 அவரது சேவைகள் பல்கலைக்கழகத்தின் நான்கு சுவர்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. அவர் உள்ளுர் மட்டத்திலும், தேசியமட்டத்திலும் சமூகத்திற்கான சேவைகளை விரிவுபடுத்தியுள்ளார். முக்கியமான பண்பாட்டு, சமய, பொதுவான அமைப்புக்களில் தலைவர், உபதலைவர், அங்கத்தவர் போன்ற பதவிகளினூடாக பொதுமக்களுக்கான சேவைகளை ஆற்றிவருகின்றார். தற்போது இந்து சமயப் பேரவையின் தலைவராகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இவ்வகையில் அவரின் புலமைத்துவம், கல்வி, நிர்வாகம் மற்றும் முக்கியமான அவரது சாதனைகள் மகத்தானவையாகவும் பல் தன்மை கொண்டனவாகவும் விளங்குகின்றன.
 அதனால் வேந்தர் அவர்களே!  இத்தகைய பெறுமதிமிக்க, பாராட்டத்தக்க சேவையாற்றிய பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம் அவர்களுக்கு கௌரவ  இலக்கிய கலாநிதி பட்டத்தை அளிப்பதற்கு தங்களுக்கு அவரை அறிமுகம் செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

பேராசிரியர்.கலாநிதி.ச.சத்தியசீலன்
பீடாதிபதி, உயர் பட்டப்படிப்புகள் பீடம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
திருநெல்வேலி.